assalamu alaikum(varah)
குர்ஆனின் சில முன்னறிவிப்புகள்
('கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்..." அல்குர்ஆன் 2:125
"..எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்... அல்குர்ஆன் 3:197
நினைவு கூறுங்கள்! 'என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்). அல்குர்ஆன் 14:35
உலகில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பபட்ட ஆலயம் கஃபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.
கஃபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்து பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்கச் சான்றாக அமைந்துள்ளது.
பாதுகாக்கபட்ட ஃபிர்அவ்னின் உடல்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம் நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:92
திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்த பின் ஃபிர்அவ்னின் உடலைக் கண்டெடுத்து எகிப்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
ஃபிர்அவ்ன் மட்டுமின்றி அவனது படையினர் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டிருந்தும் திருக்குர்ஆன் கூறியவாறு அவனது உடல் மட்டும் மீட்கப்பட்டது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்கும் சான்றாகும். பார்க்க
எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்
(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள் ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள். அல்குர்ஆன் 17:76
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். அல்குர்ஆன் 54:45
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும், இவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள் என்று கூறப்படுகிறது.
வெற்றி பெறுவார்கள் என்பதற்க்கு எந்த அறிகுறியும் இல்லாத அந்தக் கால கட்டத்தில் இறைவனின் இந்த அறிவிப்பு சில வருடங்களிலேயே உண்மைப்படுத்தப்பட்டது.
திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஓன்றாகும்.
மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்
(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான் என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்" என்று நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 28:85
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.
இப்படி வெளியேற்றப்படும் ஒருவர் “வெளியேற்றிய ஊருக்கு வந்து அதை ஆள்வார் அவருக்குச் சாதகமான நிலை ஏற்படும்" என யாரும் கற்பனை கூட செய்ய முடியாது.
ஆனால் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்குப் புறப்பட்டதைப் பற்றிப் பேசும் போது எந்த இடத்தை விட்டு விரட்டினார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு செல்வேன் என்று முன்னறிவிப்பு செய்கிறது. இந்த முன்னறிவிப்பை உலகறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னார்கள்.
சில வருடங்களிலேயே விரட்டப்பட்ட ஊருக்குச் சென்று அதை வெற்றி கொண்டு அவ்வூரைத் தம் வசப்படுத்திய இந்த நிகழ்ச்சியை, விரட்டப்படும் போதே திருக்குர்ஆன் முன்னறிவிப்பாகச் சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
அபூலஹபின் அழிவு
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). அல்குர்ஆன் 111:1-5.
இந்த அத்தியாயம் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையும், நபிகள் நாயகத்தின் முக்கிய எதிரியுமான அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பத்தில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது நபிகள் நாயகத்தின் மீது மண்ணை வாரி வீசிய அபூலஹப் “இதற்காகத் தான் எங்களை அழைத்தாயா? நீ நாசமாகப் போ!" என்று கூறி தூற்றினான். அவனைக் கண்டிக்கும் விதமாகவே இந்த அத்தியாயம் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே அவனும், அவனுடைய மனைவியும், குடும்பத்தினரும் முழுமையாக அழிக்கப்பட்டு தடயமே இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.
இதில் மிக முக்கியமான ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. "அபூலஹப் இஸ்லாத்தை ஏற்க மாட்டான். நரகத்திற்கே செல்வான்" என்று இந்த அத்தியாயம் பிரகடனம் செய்கிறது.
இஸ்லாத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அபூலஹப் இந்த அத்தியாயத்தைப் பொய்யாக்குவதற்காகவேனும் தானும் இஸ்லாத்தில் இணைவதாக நடித்திருக்கலாம். அவ்வாறு நடித்து இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு நிறைறேவில்லை. எனவே, முஹம்மது பொய்யர் என்று நிருபித்திருக்கலாம். ஆனால், கடைசி வரை அபூலஹப் எதிரியாகவே மரணித்திருப்பது இது இறைவனின் வேதம் என்பதற்கு சான்றாகும்.
விண்வெளிப் பயணம்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இருசாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?. 'மனித, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது." அல்குர்ஆன் 55:32-33
இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.
ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது.
விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்த சமுதாயத்தில் முடியும் என்பதையும், அதற்கென ஓர் ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை நிரூபித்துக் கொள்கிறது.
குர்ஆனையும் வஹீயையும் பொய்ப்படுத்தும் முயற்சிகள் நபிகளாரின் காலத்திலேயே தொடங்கி விட்டன. யமாமா பிரதேசத்தைச் சேர்ந்த பொய்யனான "முஸைலமா" என்பவன் தன்னை நபி என்றும் தனக்கு வஹி வருவதாகவும் வாதிட்டான். அவன் குர்ஆனிலுள்ள அல் கவ்ஸர் என்ற அத்தியாயத்தைப் போன்று இட்டுக் கட்டினான். ஆனால் அது அவனுடைய காலத்திலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டது.
மேலும் சில வரலாற்று சம்பவங்களை நாம் பார்க்கலாம். உத்பா பின் ராபிஆ என்பவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து தங்களது முழு அரசாங்கத்தையும், அனைத்து செல்வங்களையும் அழகிய பெண் மக்களையும் கிரயமாகக் கொடுத்து இஸ்லாத்தை விட்டு விடும்படி வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் பதிலாக குர்ஆனின் சில வசனங்களை மட்டுமே அவருக்கு ஓதிக் காட்டினார்கள். இத்தகைய நிலைக்கும் இறங்கி வர தயாரான அந்த மக்கள், இரண்டு வரி அரபு வார்த்தைகளை அமைத்து அல்லாஹ்வின் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக முடியவில்லை.
அல்லாஹ்வுடைய குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் விவாதப் பொருளாகிய செய்தி அரபுப் பகுதியை தாண்டிப் பரவிய போது ஹஜ்ஜுடைய நேரம் வந்தது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் ஒன்று கூடும் தருணத்தில் சொல்லப்படும் செய்தி உலகம் முழுவதும் போய்ச் சேரும் என்பதால் நபி (ஸல்) அவர்கள் அங்கு இஸ்லாத்தை எடுத்துச் செல்ல ஆயத்தமானார்கள். இதற்கு எதிராக அரபு மக்களும் திட்டம் தீட்டினார்கள். இதற்காக தங்களது மூத்த தலைவரும், சிறந்த அறிவாளியுமான வலீத் இப்னு முகீராவிடம் ஆலோசனை செய்யக் குழுமினர்.
"உலகின் பல பாகங்களிலிருந்தும் வரக் கூடிய மக்கள் முஹம்மதைப் பற்றி எம்மிடத்தில் விசாரிக்கும் போது நாங்கள் அவரைப் பற்றி என்ன சொல்வது? எல்லோரும் ஒருமித்து கூறுமாறு எமக்கு ஒரு வழியைக் கற்றுத் தாரும்" என்று வேண்டினர்.
அதற்கவர், "நீங்கள் அவரைப் பற்றி முதலில் அபிப்ராயம் சொல்லுங்கள். நான் இறுதி முடிவு செய்கிறேன்" என்று கூறினார்.
சிலர் கூறினர் : "அவர் பைத்தியக்காரர் என்று சொல்லாமே"
வலீத்: "அது தவறு, மக்கள் அவரைப் போய் சந்திக்கும் போது உங்கள் குட்டு வெளிப்பட்டு நீங்கள் சொன்னது பொய் என்று தெரிந்து விடும்"
கூடியிருந்தவர்கள்: "அவர் ஒரு கவிஞர் என்றோ ஜோசியக்காரர் என்றோ, ஷைத்தானுக்கு வழிப்பட்டு சில மறைவான விஷயங்களைக் கூறுகிறார் என்றோ கூறலாம்"
வலீத்: "இதுவும் தவறு. அவரோடு பழகும் போது நீங்கள் கூறியது அவதூறு என்று அறிந்து உங்கள் மீது வெறுப்புத்தான் மிஞ்சும். ஏனென்றால், உங்களிலேயே அரபுக் கவிதை இயற்றுவதில் என்னை விடத் திறமைசாலி வேறு யாருமில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன். அவர் சொல்வது போன்ற சொல் நயமும், கருத்து நயமும் செறிந்த வார்த்தைகளை எந்தக் கவிதையிலும் நான் பார்க்கவில்லை.
கூடியிருந்தவர்கள்: வேறு என்ன தான் அவரைப் பற்றிக் கூறுவது?"
வலீத்: "அவர் ஒரு சூனியக்காரர். அவரது சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையிலும், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலும் பிரிவினை ஏற்படுத்துகிறார் என்று கூறுங்கள்".
கூடியிருந்தவர்கள் அந்த முடிவையே ஏற்றுக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களைத் தோற்கடிக்க இப்படியெல்லாம் முயற்சிகளும் திட்டங்களும் தீட்டியவர்கள், அல்லாஹ்வின் சவாலை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை என்றால் அதற்குக் காரணம், இறைவேதத்தின் உண்மையான பின்னணியை அவர்கள் உணர்ந்து வைத்திருந்தது தான்.
38:87 "இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை."
majeed kuwai.
No comments:
Post a Comment