இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
(கோட்சே காந்தியை கொள்வதற்கு முன் தன் கையில் இஸ்லாமிய பெயராகிய இஸ்மாயில் என்று பசை குத்தி இருந்தான் இதன் மூலம் மத சண்டை மூண்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் அளிக்க படுவார்கள் என்று அவன் போட்ட திட்டம் அவன் வுஇறுடன் பிடி பட்டதால் பலிக்கவில்லை)
கோட்சே: வயது 37. முழுப்பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. இவனுடைய தந்தை, தபால் துறையில் மாதம் 15 ரூபாய் சம்பளம் பெற்று வந்தவர்.
கோட்சேக்கு மூன்று சகோதரர்கள்; இரண்டு சகோதரிகள். தென் மராட்டியத்தில் உள்ள சாங்லி என்ற இடத்தில் கோட்சே பிறந்தான் புனாவில் படித்த கோட்சே, பத்தாம் வகுப்பைக்கூட பூர்த்தி செய்யவில்லை. படிப்பில் நாட்டம் இல்லாமல் துறைமுகத்தில் வேலை பார்த்தான். பின்னர் பழ வியாபாரம், கார் டயர்களை பழுதுபார்த்தல்... இப்படி பல வேலைகளைப் பார்த்துவிட்டு, கடைசியில் தையல் வேலை கற்றுக்கொண்டு தையல் கடை வைத்தான்.
படிப்பு அதிகம் இல்லையென்றாலும், ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும், பேசவும் தெரியும். கார் ஓட்டுவதிலும் சூரன்.
1937_ம் ஆண்டில் சவர்க்கார் தொடங்கிய இந்து மகா சபையில் சேர்ந்தான். சிறு வயதில், ரத்தத்தை கண்டாலே கோட்சேக்கு "அலர்ஜி" என்றால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை. 1947 ஜுலை முதல், "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வந்தான்.
2,ஆப்தே: வயது 34. ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஆப்தே, "பி.எஸ்.சி" பட்டதாரி. பிறகு 1941, 42_ல் ஆசிரியர் வேலைக்கு ("பி.டி") படித்துத்தேறினான்.
1943_ல், இந்திய விமானப்படையில் 4 மாதம் பணியாற்றினான். தம்பி இறந்து போனதால், குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டு விலகி, சொந்த ஊர் திரும்பினான். அகமது நகர் பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகவும் பணிபுரிந்தான். 1934_ல் கோட்சேயுடன் பழக்கம் ஏற்பட்டது.
புனாவில், துப்பாக்கி பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, இந்து இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்தான், ஆப்தே. பின்னர் கோட்சேயுடன் சேர்ந்து, 1944_ல் "தி அக்ரானி" என்ற பத்திரிகையைத் தொடங்கினான். அந்தப் பத்திரிகையை வெள்ளையர் அரசாங்கம் தடை செய்தது. பின்னர் 13.7.1947_ல், இருவரும் சேர்ந்து "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற பத்திரிகையைத் தொடங்கினர். இதன் ஆசிரியர் கோட்சே; நிர்வாகி ஆப்தே. இதில், மகாத்மா காந்தியை கடுமையாகத் தாக்கியும், பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காரசாரமாகக் கட்டுரைகள் எழுதி வந்தனர்.
ஆப்தே, எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் உடையவன். ஆங்கிலம் பிரமாதமாகப் பேசுவான். பெண் சினேகிதிகள் ஏராளம். இவனுடைய முதல் குழந்தை ஊனமாகப் பிறந்தது. அதனால் மனைவி மீது ஆசை போய்விட்டது. பிற பெண்களின் மீது மோகம் அதிகரித்தது. ஓட்டல்களில் பணிபுரியும் பெண்கள், விமானப் பணிப்பெண்கள், காபரே நடனம் ஆடும் பெண்கள் இப்படி பலரகப்பட்ட பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். இந்தப் பெண் ஆசையால்தான், காந்தி கொலையில் இவன் போலீசாரிடம் சிக்க நேர்ந்தது, கைரேகை, ஜோசியம் என்றால் ஆப்தேக்கு ஒரே பைத்தியம். அவனுக்கும் ஜோதிடம் பார்க்கத் தெரியும். விலை உயர்ந்த மேல் நாட்டு மது, மராட்டியரின் இனிப்பு வகைகள், நல்ல உடல் கட்டு உடைய பெண்கள் என்றால் ஆப்தேக்கு ரொம்பவும் பிடிக்கும்.
3வீரசவர்க்கார் 1883 மே 28_ந்தேதி பிறந்தவர். லண்டனில் சட்டம் (பார்_அட்_லா) படிக்கச் சென்றவர். சுதந்திரப் போராட்ட தீவிரவாதி. லண்டனில் ஒரு வெள்ளைக்கார அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இந்தியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டார். அப்போது கப்பலில் இருந்து தப்பி, கடலில் குதித்து நீந்தி, பிரான்சுக்குப்போனார். பிறகு போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டார். 10 ஆண்டு காலம் சிறையில் கழித்தார். விடுதலை அடைந்த பிறகு, "இந்து மகா சபை"யைத் தொடங்கினார். இந்து _ முஸ்லிம் ஒற்றுமை எக்காலத்திலும் ஏற்படாது என்று கருதினார். காந்தியின் அகிம்சை கொள்கையை எதிர்த்தார். கோட்சேயும், ஆப்தேயும் இவருடைய சீடர்கள். லண்டனில் இருந்தபோது, காந்தியை சவர்க்கார் சந்தித்துப் பேசி இருக்கிறார்.பின்னர் சவர்க்காரின் சொந்த ஊருக்கு காந்தி சென்றிருந்தபோதும், இருவரும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.
4நாதுராம் விநாயக் கோட்சேயின் தம்பி. வயது 29. மெட்ரிகுலேஷன் தேறியவன். புனாவில் உள்ள ராணுவ தளவாடக் கிடங்கின் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி வந்தான். இந்து மகா சபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட விரும்பினான்.
5விஷ்ணு கார்கரே: வயது 34. இளமையிலேயே வறுமையை அனுபவித்தவன். அனாதை விடுதியில் வளர்ந்து ஓட்டலிலும், நாடகக் கொட்டகையிலும் வேலை பார்த்தவன். சில சமயம் பழ வியாபாரம் செய்திருக்கிறான். பிறகு சிறிய ஓட்டல் ஆரம்பித்தான். ஆப்தேயின் நட்பு கிடைத்தது. அவன் உதவியுடன் தன் உணவு விடுதியை விரிவுபடுத்தி, "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" என்ற பெயரில் ஓட்டல் நடத்த ஆரம்பித்தான்.இந்து மகாசபையின் ஒரு பிரிவான "ஆர்.எஸ்.எஸ்" அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. "இந்து மகாசபை"யின் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டான்.
6 மதன்லால் பாவா (வயது 20). காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் இளையவன். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு ஓடிவந்தான், இவன் தந்தையை பாகிஸ்தானியர் தாக்கியதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் முஸ்லிம்களை மதன்லால் வெறுத்தான். இவனுக்கும், "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" விடுதியை நடத்தி வந்த விஷ்ணு கார்கரேக்கும் அறிமுகம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் மீதான பகை இருவரையும் நண்பர்களாக்கியது.
6திகம்பர ராமச்சந்திர பாட்ஜே: வயது 37. மராட்டியத்தில் சாலீங்கான் நகரத்தைச் சேர்ந்தவன். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, புனா நகரசபையில் சின்ன வேலையில் சேர்ந்தான். வருமானம் போதவில்லை என்று சொந்தத் தொழில் செய்ய விரும்பினான். இவனது தந்தை, "பாதுகாப்பு கவசம்" செய்வதில் நிபுணர். தந்தையிடம் அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு, பிறகு கத்தி, நாட்டு வெடிகுண்டு, கையெறி குண்டு முதலியவற்றைத் தயாரிக்கலானான். இதன் மூலம், முஸ்லிம்களுக்கு எதிராகப்போராடும் இந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பல பயங்கர ஆயுதங்கள் தயாரித்து இந்து தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தான். சற்று குள்ளமான பாட்ஜே, எப்போதும் காவி உடை அணிந்து, நீண்ட தலை முடியுடன் சாமியார் போல காட்சி அளிப்பான். ஆயுதம் தயாரிப்பதுடன், ஆயுதங்களை கடத்தி விற்பதும் இவனது முக்கியத்தொழில். சங்கர் கிஸ்தியா. பாட்ஜேயின் வேலைக்காரன். ஒரு சாதாரண தச்சுத்தொழிலாளியின் மகன். முரட்டு ஆசாமி. பாட்ஜேயின் உத்தரவுப்படி, ஆயுதங்களை ரக சியமாகக் கடத்திச்சென்று, தீவிரவாதிகளிடம் கொடுப்பது, இவனுடைய முக்கிய வேலை. பாட்ஜேயின் ஆயுதப்பட்டறையில் கத்திக்கு சாணை பிடிப்பது, துப்பாக்கிகளுக்கு தேவையான குண்டுகளைத் தயாரிப்பது போன்ற வேலைகளிலும் வல்லவன்.
7சதாசிவபார்ச்சூர்: வயது 47. குவாலியர் நகரில் டாக்டராக பணி புரிந்தவர். கோட்சேக்கு துப்பாக்கி கொடுத்து உதவினார்
கொலைத்திட்டம்,
.சாமியார் வேடத்தில் ஆயுத வியாபாரம் செய்து வந்த திகம்பர் பாட்ஜேயை 1948 ஜனவரி 10ந்தேதி ஆப்தேயும், கோட்சேயும் சந்தித்தனர். "ஒரு முக்கியமான காரியத்துக்காக துப்பாக்கியும், வெடிகுண்டுகளும், கையெறி குண்டுகளும் தேவைப்படுகின்றன. அதற்குரிய தொகையை உடனடியாக ரொக்கமாகக் கொடுக்கத் தயார்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான். ஆப்தேயும், கோட்சேயும் இந்து தீவிரவாதிகள் என்பது சாமியார் பாட்ஜேக்குத் தெரியும்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதற்காக இந்த ஆயுதங்களைக் கேட்கிறார்கள் என்று நினைத்தானே தவிர காந்தியைக் கொல்வதற்காக என்பதை அறியவில்லை. பாட்ஜேயிடம் அப்போது துப்பாக்கி இல்லை. என்றாலும் பணம் வரக்கூடிய ஒரு நல்ல வியாபாரத்தை இழந்துவிட அவன் விரும்பவில்லை. "ஜனவரி 14ந்தேதி பம்பாயில் என்னை சந்தியுங்கள். நீங்கள் கேட்கும் எல்லா ஆயுதங்களையும் தருகிறேன்" என்றான். "அப்படியானால் பம்பாயில் இந்து மகாசபை அலுவலகத்தில் சந்திப்போம்" என்று பதிலளித்தான், ஆப்தே. காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் தானும் உயிர் இழக்கப்போவது உறுதி என்பதை கோட்சே உணர்ந்திருந்தான். அவன் ஏற்கனவே ரூ.3 ஆயிரத்துக்கும், ரூ.2 ஆயிரத்துக்கும் இரண்டு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தான்.
ஜனவரி 13ந்தேதி மாலை கோட்சேயும் ஆப்தேயும் புனாவில் இருந்து பம்பாய்க்கு புறப்பட்டார்கள். மறுநாள் மாலை பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். அன்றிரவு 7.30 மணிக்கு அவர்கள் இந்து மகாசபைத் தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பிறகு இந்து மகாசபை அலுவலகத்திற்குச் சென்றார்கள். அங்கு இவர்களை சாமியார் பாட்ஜே சந்தித்தான். துப்பாக்கியைத் தவிர மற்ற எல்லா ஆயுதங்களையும் கொடுத்தான். "எப்படியும் ஒரு நாட்டுத்துப்பாக்கியையாவது வாங்கித் தருகிறேன்" என்று உறுதியளித்தான். "நீ கொடுத்துள்ள ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று எனக்கோ, கோட்சேக்கோ தெரியாது. எனவே பயிற்சியளிக்க எங்களுடன் நீயும் டெல்லிக்கு வா. கூடுதலாகப் பணம் தருகிறேன்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான்.
சாமியார் பாட்ஜேக்கு பணத்தின் மீது ஆசை அதிகம். எனவே டெல்லிக்கு வர சம்மதம் தெரிவித்தான். ஆப்தேயும், கோட்சையும் காந்தியைக் கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி போகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. இதன்பின் பம்பாயில் புகழ் பெற்ற "சீ கிரீன் ஓட்டல்" என்ற ஓட்டலில் கோட்சேயும், ஆப்தேயும் தங்கினார்கள். பாட்ஜே, கார்கரே, மதன்லால் ஆகியோரை இந்துமகாசபை அலுவலகத்தில் தங்க வைத்தார்கள். கோட்சே அசதியில் தூங்கிவிட்டான். ஆப்தே தன் பெண் சிநேகிதிக்கு போன் செய்தான். அவள் டாக்டர் ஒருவரின் மகள். "நாளை நான் டெல்லிக்கு போகிறேன். இன்று உன்னை சந்திக்க விரும்புகிறேன்" என்று டெலிபோனில் கூற அவள் சம்மதம் தெரிவித்தாள். கோட்சே தூங்கிவிட்டதால் அவனுக்குத் தெரியாமல் ஆப்தே அங்கிருந்து வெளியேறி தன் காதலியைச் சந்தித்தான். அவளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினான். பொழுது விடிந்தது.
கோட்சேயும், ஆப்தேயும் இந்துமகாசபை அலுவலகத்துக்குச் சென்று தங்களுடைய நண்பர்களைச் சந்தித்தனர். கோட்சேயும், ஆப்தேயும் டெல்லிக்கு விமானத்தில் செல்வது என்றும் மற்றவர்கள் வெவ்வேறு ரெயில்களில் டெல்லிக்கு செல்வது என்றும் டெல்லியில் இந்து மகாசபை அலுவலகத்தில் ("சவர்க்கார் சதன்") அனைவரும் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவாயிற்று.
இதற்கிடையே பாட்ஜே ஏற்கனவே உறுதியளித்தவாறு நாட்டுத்துப்பாக்கி ஒன்றை கொண்டுவந்து கொடுத்தான். எனினும் அது கோட்சேக்கு திருப்தி இல்லை. தம்பி கோபால் கோட்சேயிடம் ரூ.200 கொடுத்து நல்ல துப்பாக்கி ஒன்றை வாங்கி வருமாறு கூறினான். பிறகு கோட்சேயும், ஆப்தேயும் பம்பாய் "ஏர் இந்தியா" விமானப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று, டி.என்.கார்மார்க்கர், எஸ்.மராத்தே என்ற போலிப் பெயர்களில் இரண்டு டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்தனர்.
பின்னர் ஒரு ஜவுளி மில்லுக்குச் சென்று நன்கொடையாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டார்கள். திட்டமிட்டபடி 17ந்தேதி பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லிக்குப் போய்ச்சேர்ந்த கோட்சேயும், ஆப்தேயும், கனாட் சர்க்கஸ் என்ற பரபரப்பான பகுதியில் இருந்த "மரினா" என்ற ஓட்டலில் தங்கினார்கள்.
உண்மைப் பெயர்களை கூறாமல், எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ்பாண்டே என்ற பெயர்களில் அறை எடுத்தார்கள். மதன்லால், கார்கரே ஆகியோர் முன்பு பேசியபடி ரெயில் மூலம் டெல்லிக்குச் சென்றனர். "இந்து மகாசபை" அலுவலகத்தில் இடம் கிடைக்காததால், சாந்தினிசவுக் என்ற இடத்தில் உள்ள ஷெரீப் ஓட்டலில் அறை எடுத்தனர்.
கார்கரே தன் பெயரை "பி.எக்ஸ்.பியாஸ்" என்று குறிப்பிட்டான். ஆனால் மதன்லால், தன் உண்மைப் பெயரையே கூறினான். (உண்மைப்பெயரில் அறை எடுத்ததால், காந்தி கொலை வழக்கில் இவன் சுலபமாக சிக்க நேரிட்டது). அண்ணன் கொடுத்த ரூ.200 ஐக்கொண்டு ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி போய்ச்சேர்ந்தான். போலி சாமியார் பாட்ஜேயும், தன் வேலையாள் சங்கர் கிஸ்தயாவுடன் வேறு ரெயிலில் 19_ந்தேதி டெல்லியை அடைந்தான். மறுநாள் ஆப்தேயை கார்கரே சந்தித்தான்.
இந்து மகாசபாவில் தனக்கு அறை கிடைக்கவில்லை என்றும் வேறு இடத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தான். ஆப்தே ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி "இதை இந்து மகாசபை செயலாளரிடம் கொண்டு போய் கொடு. ரூம் கிடைக்கும்" என்றான். அதன்படியே அங்கு சென்று துண்டுச்சீட்டைக் காட்டியதும் அறை கிடைத்தது. கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி வந்து சேர்ந்து தன் அண்ணனை சந்தித்தான். அன்று மாலை பிர்லா மாளிக்கைக்கு சென்ற கோபால் கோட்சே, பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியை முதன் முதலாகப் பார்த்தான்.
நிறைய போலீசார் சாதாரண உடை அணிந்து ("மப்டி"யில்) கூட்டத்தோடு கலந்திருப்பதையும் கவனித்தான். காந்தியை சுட்டுவிட்டு, போலீசாரிடமிருந்து தப்பிச் செல்வது கடினம் என்று அவனுக்குத் தோன்றியது. பின்னர் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் மரினா ஓட்டலில் சந்தித்துப் பேசினார்கள். கொலைத்திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று முடிவு செய்யும் முழு அதிகாரமும் ஆப்தேக்கு வழங்கப்பட்டது.
நீண்ட ஆலோசனைக்குப்பின் "1948 ஜனவரி 20_ந்தேதி மாலை 5 மணிக்கு பிர்லா மாளிகையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொல்லவேண்டும்" என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது சாமியார் பாட்ஜே அந்த அறையில் இல்லை. வேறொரு அறையில் இருந்தான். அவனை ஆப்தே அழைத்து, "வெடிகுண்டை எப்படி வெடிக்கச்செய்வது?" என்பதை விளக்கிக் காட்டும்படி கேட்டுக்கொண்டான்.ஏதோ வன்முறை ஆர்ப்பாட்டத்துக்குத்தான் ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஊகித்த பாட்ஜே, வெடிகுண்டை இயக்குவது பற்றி விளக்கினான். மறுநாள் காலை பாட்ஜே, சங்கர் கிஸ்தயா ஆகியோருடன் ஆப்தே பிர்லா மாளிகைக்கு சென்றான். எந்த இடத்தில் இருந்து காந்தியை நோக்கி குண்டு வீசலாம், எங்கிருந்து துப்பாக்கியால் சுடலாம் என்று ஆராய்ந்தான். "பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடலில் சோதனையிடக்கூடாது" என்று காந்தி கண்டிப்பாக கூறியிருந்தார்.
இதன் காரணமாக கூட்டத்துக்கு வருகிறவர்களை சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்க வேண்டுமே தவிர, யாரையும் சோதனைபோடவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் உத்தரவிட்டிருந்தார். இதை அறிந்த ஆப்தே மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் இவர்களுடன் கோட்சே, கோபால் கோட்சே, கார்கரே, மதன்லால் ஆகியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். இந்து மகாசபையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.
பாட்ஜேயின் நாட்டுத்துப்பாக்கியும், கோபால் கோட்சேயின் கைத்துப்பாக்கியும் சரியாக இயங்குகின்றனவா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. துப்பாக்கிகள் இலக்கை சரியாகப் போய்த் தாக்கக்கூடிய வேகத்துடன் இல்லை என்று கோட்சே கருதினான். "என் துப்பாக்கி நீண்ட காலம் பயன்படுத்தப்படாததால் துரு பிடித்திருக்கிறது. கொஞ்சம் எண்ணையும், ஒரு சிறு கம்பியும் இருந்தால் சரி செய்துவிடலாம்" என்றான் கோபால் கோட்சே. மதன்லால் போய் அந்த இரண்டு பொருள்களையும் வாங்கி வந்தான். அதைக்கொண்டு துப்பாக்கியை சரி செய்தான் கோபால் கோட்சே. இவர்கள் அந்த இடத்திலிருந்து திரும்பிச் செல்லும்போது, மெகர்சிங் என்ற காட்டிலாகா அதிகாரி அங்கு வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். "ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் உங்களுக்கு என்ன வேலை?" என்று கேட்டார் அந்த அதிகாரி. "நாங்கள் டெல்லியைச் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்" என்றான், ஆப்தே. மதன்லால் பஞ்சாபி மொழியில் பேசி, மெகர்சிங்கை நம்பும்படி செய்தான். (இந்த மெகர்சிங் பிறகு காந்தி கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக வந்து கொலையாளிகளை அடையாளம் காட்டினார்.)
மரினா ஓட்டலுக்குத் திரும்பிய இவர்கள் அன்று மாலை காந்தியை கொலை செய்யும் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். அந்தத் திட்டம் வருமாறு:
ஒரே சமயத்தில் காந்தி மீது பலமுனைத் தாக்குதல் நடத்தவேண்டும். சாதகமான நேரம் வந்ததும், கோட்சே தன் கன்னத்தைச் சொறிவது போல, ஆப்தேக்கு "சிக்னல்" கொடுக்கவேண்டும். உடனே ஆப்தே தன் கைகளை உயர்த்தி, மாளிகையின் பின்புறம் சுவர் அருகே வெடிகுண்டுகளுடன் காத்திருக்கும் மதன்லாலுக்கு சைகை காட்ட வேண்டும். உடனே மதன்லால் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய வேண்டும்.
வெடிச்சத்தத்தைக் கேட்டதும் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும். உடனே கார்க்கரே காந்தி மீது கையெறி குண்டை வீசவேண்டும். அதே சமயம் பிரார்த்தனை மண்டபத்தின் பின் சுவரில் உள்ள சிறு ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கியோ, முதுகை நோக்கியோ கையெறிகுண்டை கோபால் கோட்சே வீச வேண்டும். கோபால் அருகிலிருந்து காந்தியை நோக்கி சாமியார் பாட்ஜே துப்பாக்கியால் சுடவேண்டும். சங்கர் கிஸ்தியா கூட்டத்தில் இருந்துகொண்டு காந்தி மீது எறிகுண்டை வீசுவதுடன் துப்பாக்கியாலும் சுடவேண்டும்." மேற்கண்டவாறு முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டு யாராவது போலீசில் பிடிபட்டால் எப்படிப்பட்ட சித்ரவதை செய்தாலும் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விசுவாசமாக நடந்து கொள்ளவேண்டும் என்று இந்து மதத்தின் பெயரால் அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள். பின்னர் பிர்லா மாளிகைக்குப் புறப்படத் தயாரானார்கள்,
காந்தியை கொல்ல முதல் முயற்சி,,,,
காந்திஜியின் பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்லும்போது தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்று கோட்சேயும், மற்றவர்களும் நினைத்தனர். கோட்சே, மராத்திய பாணியில் உடை அணிந்து கொண்டான். ஆப்தே வேட்டி சட்டையிலும், மதன்லால் மேற்கத்திய உடையிலும் இருந்தனர். கார்கரே நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு பிராமணர் போலத்தோன்றினான். ஒவ்வொருவருக்கும் புதிய புனை பெயர்கள் சூட்டப்பட்டதுடன், அவரவர்களுக்கு உரிய ஆயுதங்களும் தரப்பட்டன. கோட்சே, மதன்லால், கார்கரே ஆகியோர் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளில் ("டோங்கா") தனித்தனியே புறப்பட்டனர். ஆப்தேயும், மற்றவர்களும் ஒரு காரில் சென்றனர். ஏற்கனவே திட்டமிட்டபடி, கோபால் கோட்சேயும், சாமியார் பாட்ஜேயும் பிர்லா மாளிகையின் பின்புறமுள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக உள்ளே நுழைய வேண்டும். அவர்களை அங்கு கொண்டு போய் விடுவதற்காக ஆப்தேயும், கார்கரேயும் உடன் சென்றனர்.
வழியில் பிர்லா மாளிகையின் ஊழியர் (கார் கழுவும் சிப்பந்தி) சோதிராம் என்பவர் அவர்களை வழிமறித்து, "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார். "காந்தி பிரார்த்தனை கூட்டத்தில் பேசும்போது பின்பக்கம் இருந்து அவரை போட்டோ எடுக்கப் போகிறோம்" என்று கார்கரே பதில் அளித்தான். "எங்கே கேமராவை காட்டுங்கள்" என்று சோதிராம் கேட்க, உடனே ஆப்தே, வெடிப்பொருள்கள் அடங்கிய பெட்டியை காண்பித்து, "இதற்குள்தான் கேமரா இருக்கிறது" என்றான்.
சோதிராம் தயங்கவே, கார்கரே இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து சோதிராமின் கையில் அழுத்தினான். உடனே அவர்களுக்கு வழிவிட்டான் சோதிராம். சாமியார் பாட்ஜே, கோபால் கோட்சே இருவரையும் ஜன்னல் அருகே விட்டு விட்டு, ஆப்தே திரும்ப முயன்றபோது, "கொஞ்சம் நில்லுங்கள்" என்று கூறினான், பாட்ஜே. அவன் குரலில் கோபம் தொனித்தது. "நான் உங்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தேன். அவற்றை இயக்கிக் காட்டவே வந்தேன். மகாத்மா காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் நான் சேரமாட்டேன்" என்று கூறிய பாட்ஜே,"நான் மத வெறியன் அல்ல.
ஆயுதங்களை விற்பவன் என்றாலும் என் கையால் யாரையும் சாகடிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு தரையில் உட்கார்ந்து விட்டான். பாட்ஜே இப்படி கடைசி நேரத்தில் பின்வாங்குவான் என்று ஆப்தே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனவே அப்படியே திகைத்துப்போய் நின்றான். "காந்தியை கொலை செய்யப்போவதாக முன்பே நீங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த தேசத்துரோக காரியத்திற்கு நான் உடந்தையாக இருந்திருக்க மாட்டேன்" என்றான் பாட்ஜே.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இனி அவனுடன் விவாதித்து பயனில்லை என்று ஆப்தே உணர்ந்தான். "அப்படியானால் நீ இங்கே இருக்க வேண்டாம். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போய்விடு" என்று கூறினான். "காந்தியை சுடும் பொறுப்பை நீ நிறைவேற்று" என்று கோபால் கோட்சேயிடம் கூறிவிட்டு ஆப்தே அங்கிருந்து வெளியே விரைந்தான்.
கோபால் கோட்சே சுவரில் இருந்த ஜன்னலை நோக்கினான். அது மிக உயரத்தில் இருந்தது. தரையில் நின்று கொண்டு அதன் வழியாக யாராலும் சுடமுடியாது. ஏணி அல்லது நாற்காலி இருந்தால்தான் அதில் ஏறி காந்தியை நோக்கி சுடமுடியும். என்ன செய்வது என்று புரியாமல் கோபால் திகைத்தான். உண்ணாவிரதம் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்த காந்திஜியை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து பிரார்த்தனை நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்தார்கள்.
கூட்டம் தொடங்கியது. "காந்தி மீது பலமுனை தாக்குதல் நடத்த இதுவே நல்ல தருணம்" என்று நினைத்தான் கோட்சே. தன் கன்னத்தை சொறிந்து ஆப்தேக்கு சமிக்ஞை செய்தான். உடனே ஆப்தே தன் கையை உயர்த்தி குண்டை வெடிக்கச் செய்ய மதன்லாலுக்கு சிக்னல் கொடுத்தான். பிர்லா மாளிகையின் பின்புறச் சுவர் அருகே நின்று கொண்டிருந்த மதன்லால், தன் வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். குண்டு வெடித்தது. பிர்லா மாளிகையின் பின்புறச்சுவரின் ஒரு பகுதி தகர்ந்தது. இந்த சத்தத்தினால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படவே கார்கரே நெரிசலில் சிக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டான். அந்த இடத்தில் இருந்து காந்தி மீது அவன் கை குண்டை வீசமுடியாத நிலை ஏற்பட்டது.
ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கி சுடவேண்டிய கோபால் கோட்சேயும், ஜன்னல் உயரமாக இருந்த காரணத்தால் சுட முடியவில்லை. காந்திக்கும், அவரைச்சுற்றி இருந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதே தெரியாது. பிர்லா மாளிகைக்கு அருகே ராணுவத்தினர் எதையாவது வெடித்து ஒத்திகை பார்ப்பது வழக்கம். வெடிச்சத்தத்தைக் கேட்ட காந்தியும், மற்றவர்களும் அதை வழக்கமான ராணுவ ஒத்திகை என்றே நினைத்தனர். பிரார்த்தனைக் கூட்டம் தடங்கல் இன்றி நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே பிர்லா மாளிகைப் பூங்காவுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த சுலோசனாதேவி என்ற பெண் வெடிகுண்டை மதன்லால் வெடித்ததையும், பிறகு அவன் தப்பி ஓட முயற்சிப்பதையும் பார்த்துவிட்டாள்.
"பிடியுங்கள்! பிடியுங்கள்!" என்று கூச்சலிட்டாள். அந்தப் பகுதியில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியும், சில போலீசாரும், மற்றும் சிலரும் மதன்லாலை சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டனர். அவன் திமிறிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது, சரியான அடி_உதை விழுந்தது. அதனால் அவன் சட்டை கிழிந்தது. அவனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பிர்லா மாளிகைக்குள் இழுத்துச்சென்றனர். மதன்லால் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதை தூரத்தில் இருந்து கோட்சேயும், ஆப்தேயும் மற்றவர்களும் பார்த்தனர்.
இனி தப்பி ஓடுவதுதான் புத்தசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்து அந்த இடத்தில் இருந்து நழுவத் தொடங்கினர். கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் காரில் தப்பிச்சென்றனர். வழியில் தன் தம்பியிடம் கோட்சே சொன்னான்: "மதன்லால் மூலம் போலீசார் உன்னைப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. போலீசாரிடம் சிக்காமல் நீ எப்படியாவது புனாவுக்குச் சென்றுவிடு. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. காந்தியை நான் கவனித்துக்கொள்கிறேன். துணிந்தவனுக்கு தோல்வி என்பதே இல்லை." இப்படிக் கூறிய கோட்சே வழியில் காரை நிறுத்தி கோபாலை இறக்கிவிட்டான்.
பிறகு கோட்சேயும், ஆப்தேயும் மரினா ஓட்டலுக்குச் சென்றனர். அறையை உடனடியாக காலி செய்துவிட்டு டெல்லி ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி அருகில் உள்ள துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையத்தின் சப்_இன்ஸ்பெக்டர் தசோந்தாசிங் உடனே பிர்லா மாளிகைக்கு விரைந்தார். மதன்லாலை அவர் பரிசோதித்தார். மதன்லால் தன் உடலில் இன்னொரு கையெறி குண்டை மறைத்து வைத்திருந்தான்.
அதை போலீஸ் அதிகாரி கைப்பற்றி செயல் இழக்கச் செய்தார். மதன்லாலை "விசாரிக்க வேண்டிய விதத்தில்" விசாரித்தால், உண்மையைக் கக்கிவிடுவான் என்று போலீசார் கருதினர். அதன்படி போலீஸ் காவலில் வைத்து விசாரித்தார்கள். சித்ரவதைக்குள்ளான மதன்லால் உண்மையைக் கக்கினான். போலீசாரிடம் அவன் கூறியதாவது:-
"நான் மட்டும்தான் சொன்னபடி செய்தேன். மற்றவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். எனக்கு துரோகம் செய்த அவர்களைப் பிடிக்க நான் ஒத்துழைக்கிறேன்.
என்னுடன் வந்தவர்கள் மொத்தம் 6 பேர். அவர்கள் ஓட்டல் மரினாவிலும், இந்துமகா சபை அலுவலகத்திலும் இருப்பார்கள். " இவ்வாறு மதன்லால் கூறினான். மதன்லாலுடன் ஓட்டல் மரினாவுக்கு போலீசார் விரைந்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்படியும் மதன்லால் தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவான் என்று எதிர்பார்த்த கோட்சேயும், ஆப்தேயும் சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்பே அறையை காலி செய்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது.
எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ் பாண்டே என்ற பெயர்களில் கோட்சேயும், ஆப்தேயும் ஓட்டலில் ரூம் எடுத்திருந்தது விசாரணையில் தெரிந்தது. அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனையிட்டார்கள். கோட்சே "என்.வி.ஜி" என்று குறியிடப்பட்ட மூன்று உடைகளை சலவைக்குப் போட்டிருந்தான். அதற்கான ரசீது அந்த அறையில் சிக்கியது. இந்துமகா சபை பொதுச்செயலாளரின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதம் ஒன்றும் போலீசுக்குக் கிடைத்தது. அதில் காந்திக்கு எதிரான வாசகங்கள் இருந்தன.
ஓட்டல் அறையை காலி செய்த கோட்சேயும், ஆப்தேயும் டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்தனர். கோட்சேக்கு முதல் வகுப்பு டிக்கெட்டும், ஆப்தேக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கப்பட்டன. அவர்கள் இருவரும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்றபோது அதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்கள்.
மதன்லாலை போலீசார் இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அவன் தலை கறுப்புத்துணியால் மூடப்பட்டு இருந்தது. கண்களால் பார்ப்பதற்காக இரண்டு துவாரங்கள் மட்டும் இருந்தன. "நன்றாகப் பார்! உன்னுடன் வந்த கொலையாளிகள் இங்கு இருக்கிறார்களா?" என்று மதன்லாலிடம் போலீசார் கேட்பது கோட்சேக்கும், ஆப்தேக்கும் கேட்டது. இருவரும் போலீசார் கண்களில் படாமல் ரெயிலில் ஏறினார்கள். ரெயில் புறப்படும் வரை அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. மறுநாள் கான்பூர் போய்ச்சேர்ந்தார்கள். அடுத்த நாள் அங்கிருந்து ரெயிலில் புறப்பட்டு 23_ந்தேதி மாலை பம்பாய் போய்ச்சேர்ந்தார்கள்.
காந்தியை கொல்ல இரண்டாவது முயற்சி,,,,,,,,,,
மே 1944, காந்தி அகா கான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.
காந்தியை கொல்ல மூன்றாவது முயற்சி,,,,,,,,,
காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் இந்து முன்னணியினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
காந்தியை கொல்ல நான்காவது முயற்சி,,,,,,,
ஜூன் 29,1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல் க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது முயற்சசி மகாத்மா சுட்டுக்கொல்லப்பட்டார்,,,,,,,
காந்தி கொலை முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பது பற்றி அலசி ஆராய்ந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் விவாதித்தனர். "பல பேர் கூட்டமாகச் சேர்ந்து மகாத்மாவை கொலை செய்யத் திட்டமிட்டோம். அது மாபெரும் தவறு. தனி நபராக இருந்து கொலை செய்வதுதான் பலனளிக்கும்" என்றான் ஆப்தே.
நானே தனி மனிதனாக காந்தியை சுட்டுக்கொல்கிறேன்" என்று சபதம் செய்தான் கோட்சே. "ஒருவேளை இம்முறை காந்தி உயிர் தப்பிவிட்டால் பிறகு அவரை மீண்டும் கொல்ல முயற்சி செய்யமாட்டேன்" என்றும் தெரிவித்தான்.
கோட்சேயும், ஆப்தேயும் முயற்சி செய்து எப்படியாவது ஒரு நல்ல துப்பாக்கியை வாங்க"பாங்க் சில்வர்" என்ற கம்பெனிக்கு சென்று ஹிந்து ராஷ்டிரா அமைப்புக்காக ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுக்கொண்டார்கள்.
27_ந்தேதி காலை 6.30 மணி விமானத்தில் பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். வி.விநாயக்ராவ் என்ற பெயரில் கோட்சேயும் டி.நாராயணராவ் என்ற பெயரில் ஆப்தேயும் பயணம் செய்தனர்.
ரெயில் மூலம் குவாலியர் நகருக்கு சென்றார்கள். அங்கு இந்து தீவிரவாதியான டாக்டர் பார்ச்சூரை சந்தித்து துப்பாக்கி தேவைப்படுவதாக கூறினார்கள். இதில் ஏதாவது பிரச்சினை வரலாம் என்று நினைத்த டாக்டர் பார்ச்சூர், "கங்காதர் தாந்த்வாதே என்பவரை சந்தியுங்கள். அவரிடம் துப்பாக்கி கிடைக்கும்" என்றார். அதன்படி தாந்த்வாதேயை சந்தித்தனர். அவன், ஜகதீஷ் பிரசாத் கோயல் என்பவன் மூலமாக 300 ரூபாய்க்கு கறுப்பு நிற துப்பாக்கி (பெராட்டா பிஸ்டல்) ஒன்றை வாங்கித் தந்தான்.
மகிழ்ச்சி அடைந்த கோட்சேயும், ஆப்தேயும் குவாலியரை விட்டு ரெயிலில் புறப்பட்டு, 29_ந்தேதி காலை பழைய டெல்லிக்குப் போய்ச்சேர்ந்தார்கள். ரெயில்வே நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை ஒன்றை "விநாயக் ராவ்" என்ற பெயரில் எடுத்து தங்கினார்கள். அங்கு அவர்களை கார்கரே சந்தித்தான். "துப்பாக்கி கிடைத்துவிட்டது" என்று அவனிடம் கோட்சே மகிழ்ச்சியுடன் கூறினான். "நாளை (30_ந்தேதி) காந்தியை சுடப்போகிறோம். இன்றிரவு நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்" என்று கோட்சே கூறினான்.
கார்கரே எப்போதும் சைவ சாப்பாடு சாப்பிடுபவன். எனவே மூவரும் சைவ சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அரிசி சோறு, தயிர், சப்பாத்தி, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டனர். பின்னர் அறைக்குத் திரும்பினர். தனக்கு மறுநாள் உள்ள பெரும் பொறுப்பை உணர்ந்திருந்த கோட்சே நன்றாக ஓய்வு எடுக்க விரும்பி படுக்கையில் போய் படுத்துக்கொண்டான். தூக்கம் வராததால் ஒரு துப்பறியும் நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ஆப்தேயும், கார்கரேயும் ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சினிமாத் தியேட்டருக்குச் சென்று ஆங்கிலப்படம் பார்த்தனர். மறுநாள் காலை ரெயில்வே கேண்டினில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மூவரும் பிர்லா மாளிகைக்கு சென்றனர். பிரார்த்தனை கூட்டத்துக்கு காந்தி வரும்போது நேருக்கு நேர் நின்று அவரை சுடப்போவதாக கோட்சே தெரிவித்தான்.
காந்தியை கோட்சே சுடும்போது அவனுக்கு இடைஞ்சலாக எதுவும் நிகழாமல் தடுக்க அவனுக்கு இரு புறத்திலும் ஆப்தேயும், கார்கரேயும் பாதுகாப்பாக நிற்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்கள். துப்பாக்கியை இயக்குவது எப்படி என்று அங்கு பயிற்சி பெற்றான் கோட்சே. மொத்தம் இருந்த 20 குண்டுகளில் 13 குண்டுகளை சுட்டுப் பழகுவதற்கு செலவிட்டான். காட்டில் இருந்த மரம், அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றை ஆப்தே குறிப்பிட்டுக்காட்ட மிகச்சரியாக சுட்டான்கோட்சே. மீதி 7 குண்டுகளை துப்பாக்கியில் நிரப்பிக் கொண்டான். பின்னர் ரெயில் நிலைய ஓய்வு அறைக்குத் திரும்பினார்கள். காந்தியை சுடுவதற்கு பிர்லா மாளிகைக்குள் எப்படி நுழைவது என்று ஆலோசிக்கப்பட்டது.
இரண்டு வழிகள் யோசிக்கப்பட்டன. முதலாவது கோட்சே புகைப்படம் எடுப்பவர்போல கேமராவுடன் உள்ளே நுழையவேண்டும். கேமராவுக்குள் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு போகலாம். அடுத்தது முஸ்லிம் பெண் போல உடம்பை கறுப்பு நிற பர்தா துணியால் மூடிக்கொண்டு துப்பாக்கியை மறைத்துக்கொண்டு செல்லலாம். "முஸ்லிம் பெண் போல சென்றால் யாரும் சோதனை போடமாட்டார்கள். காந்தியின் அருகே செல்ல முடியும்" என்றான் கார்கரே.
"முஸ்லிம் பெண்மணி போல பர்தாவுக்குள் ஒளிந்துகொண்டுபோக நான் தயாராக இல்லை. அதைவிட காந்தியை சுடாமலேயே விட்டுவிடலாம்" என்றான் கோட்சே. "பெண் வேடத்தில் காந்தியை சுட முயன்று அதில் தோல்வி அடைகிறேன் என்று வைத்துக்கொள்வோம். முஸ்லிம் பெண் வேடத்தில் என் படம் பத்திரிகைகளில் வரும். அதைவிட வேறு அவமானம் எனக்கு வேறு என்ன இருக்கமுடியும்? உலகமே என்னைப் பார்த்து சிரிக்கும்" என்று கூறினான் அவன். புகைப்படக்காரன் போல கேமராவுக்குள் துப்பாக்கியைக் கொண்டு போகும் திட்டத்தை ஆப்தே விரும்பவில்லை. "இப்போது சிறிய கேமராக்கள் வந்துவிட்டன. நிகழ்ச்சிகளுக்கு பெரிய கேமராக்களை யாரும் கொண்டு போவதில்லை. தவிர கடந்த 20_ந்தேதி புகைப்படக்காரர்கள் என்ற வேடத்தில்தான் பிர்லா மாளிகைக்குச் சென்றோம். மீண்டும் அதே தோற்றத்தில் போவது ஆபத்து" என்று கூறினான். நீண்ட ஆலோசனைகளுக்குப்பின் கடைசியாக ஆப்தே ஒரு யோசனையைச் சொன்னான்.
அப்போது, டெல்லி இளைஞர்களிடையே ராணுவ மாடல் உடை என்பது பிரபலமாக இருந்தது. முழுக்கால் சட்டையில் லூசான சட்டையை "இன்" செய்து கொள்ளவேண்டும். இடுப்புப்பகுதியில் சட்டை தொளதொளப்பாக இருக்கும். அந்தப் பகுதியில் சிறிய கைத்துப்பாக்கியை சொருகிக் கொள்ளலாம். யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆப்தே சொன்ன இந்த யோசனையை கோட்சே ஏற்றுக்கொண்டான்.
பிறகு கோட்சேயும், ஆப்தேயும் கடைக்குச்சென்று சாம்பல் நிறத்தில் ராணுவ மாடல் உடையை வாங்கிக்கொண்டு ரெயில் நிலைய ஓய்வு அறைக்கு சென்றார்கள். அந்த அறையில் தங்குவதற்கான நேரம் முடியவும் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கான ஓய்வு அறையை எடுத்து அங்கு தங்கினார்கள். மாலை 4 மணியாகியது. காந்தியைக் கொலை செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.என்ற எண்ணத்துடன் கோட்சேயும், மற்ற இருவரும் புறப்படத் தயாரானார்கள்.
1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.
"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.
சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.
போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. "பிர்லா மாளிகையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து." சுட்டவன் ஒரு இந்து என்பது மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட்டது. பொதுமக்கள் வேறுவிதமாக நினைத்து, இந்து, முஸ்லிம் கலவரம் மூண்டுவிடக்கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.(கோட்சே காந்தியை கொள்வதற்கு முன் தன் கையில் இஸ்லாமிய பெயராகிய இஸ்மாயில் என்று பசை குத்தி இருந்தான் இதன் மூலம் மத சண்டை மூண்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் அளிக்க படுவார்கள் என்று அவன் போட்ட திட்டம் அவன் வுஇறுடன் பிடி பட்டதால் பலிக்கவில்லை)
மகாத்மா காந்தி கொலையையொட்டி கோட்சே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்,,,,
கோட்சே பிடிபட்டதைத் தொடர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவிய ஆப்தேயும், கார்கரேயும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். 30_ந்தேதி இரவை டெல்லி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கியிருந்த அகதிகள் கூட்டத்துடன் தங்கியிருந்தார்கள். மறுநாள் (31_ந்தேதி) பிற்பகல் டெல்லியில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில், ஆப்தே இரண்டாம் வகுப்பிலும், கார்கரே மூன்றாம் வகுப்பிலும் பிரயாணம் செய்தார்கள்.
பிப்ரவரி இரண்டாம் தேதி பம்பாய் சென்று, "சீகிரீன்" ஓட்டலில் அறையெடுத்து தங்கினார்கள். பின்னர் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க புனாவுக்கும், மற்றும் பல இடங்களுக்கும் சென்று தலைமறைவாக இருந்தார்கள். இதற்கிடையே ஜனவரி 20_ந்தேதி காந்தியடிகளைக் கொல்ல பிர்லா மாளிகையில் குண்டு வீசி போலீசில் சிக்கிய மதன்லால், கொலை சதித்திட்டம் பற்றி முக்கிய விவரங்களையெல்லாம் கூறியிருந்தான்.
காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேயிடமும் தீவிர விசாரணை நடந்தது. தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கொலைத்திட்டத்தின் "மூளை"யாக செயல்பட்டவன் ஆப்தே என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவனைப் பிடிக்க பல இடங்களில் வலை விரித்தனர். பம்பாய், புனா நகரங்களில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் யார் யார் வருகிறார்கள் என்று ரகசியமாகக் கண்காணித்தனர்.
ஓட்டல்களுக்கு வரும் டெலிபோன்களும் ஒட்டு கேட்கப்பட்டன. பிப்ரவரி 13_ந்தேதி ஆப்தேயும், கார்கரேயும் பம்பாய் சென்றனர். அங்குள்ள "அப்பல்லோ பைரக்ஸ்" என்ற ஓட்டலில் தங்கினர். இந்த சமயத்தில் ஆப்தேயின் காதலி (டாக்டரின் மகள்) அந்த ஓட்டலுக்கு போன் செய்தாள். "ஆப்தே அங்கு வந்திருக்கிறாரா? எந்த நெம்பர் அறையில் தங்கியிருக்கிறார்?" என்று கேட்டாள். ஓட்டல் வரவேற்பாளர் ஓட்டல் ரிஜிஸ்தர் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்துவிட்டு, ஆப்தேயின் ரூம் நெம்பரை சொன்னார். "நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வந்து அவரை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு டெலிபோனை வைத்துவிட்டாள் அந்தப்பெண்.
ஓட்டல் வரவேற்பாளர் இன்டர்காம் மூலம் ஆப்தேயுடன் தொடர்பு கொண்டு, "டாக்டரின் மகள் டெலிபோனில் பேசினார். இன்னும் அரை மணி நேரத்தில் ஓட்டலுக்கு வந்து உங்களைச் சந்திப்பதாகச் சொன்னார்" என்று தகவல் தெரிவித்தார். போலீசுக்கு பயந்து கவலையுடன் தலைமறைவாகத் திரிந்தாலும், தன் காதலி தன்னைச் சந்திக்க இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறாள் என்ற தகவல், ஆப்தேயின் மனதில் மகிழ்ச்சி அலைகளை எழுப்பியது. அவள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.
ஓட்டலுக்கு அவன் காதலி போன் செய்து பேசியபோது, போலீசார் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்குத் தெரியாது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அறைக்கதவு "டொக், டொக்" என்று தட்டப்படும் ஓசை கேட்டது. "காதலி வந்துவிட்டாள்" என்ற பரவசத்துடன் ஓடிச்சென்று கதவைத் திறந்தான் ஆப்தே. வெளியே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச் செய்தன. அவன் கண்கள் நிலைகுத்தி நின்றன. பேயறைந்தவன்போல் ஆனான். காரணம் வெளியே நின்று கொண்டிருந்தது அவன் காதலி அல்ல; போலீசார்! காமத்தால் மதியிழந்த ஆப்தே அதற்கு மேல் தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்தவனாக போலீசாரிடம் சரண் அடைந்தான்.
போலீசார் தயாராகக் கொண்டு போயிருந்த விலங்கை அவன் கைகளில் மாட்டினர். அதே அறையில் பதுங்கியிருந்த கார்கரேயும் கைது செய்யப்பட்டான். இதைத்தொடர்ந்து காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிப்ரவரி 15_ந்தேதிக்குள் கைது செய்யப்பட்டனர்.
கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே, மராட்டியத்தில் உக்சான் என்ற இடத்துக்கு அருகே கைது செய்யப்பட்டான். புனாவில் உள்ள காடுகளில் அலைந்து திரிந்துவிட்டு திரும்பிய திகம்பர் பாட்ஜே, ஒரு காளி கோவில் அருகே பிடிபட்டான். பாட்ஜேயின் வேலைக்காரன் இஸ்தியா பம்பாயில் போலீசாரிடம் சிக்கினான். ஜனவரி 20_ந்தேதி பிர்லா மாளிகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோது கடைசி நேரத்தில் காந்தியைக் கொல்ல முடியாது என்று மறுத்துவிட்ட சாமியார் பாட்ஜே போலீஸ் தரப்பு சாட்சியாக ("அப்ரூவர்") மாறினான்.
"ஒருநாள் கோட்சேயும், ஆப்தேயும் இந்து மகா சபை தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பேச்சு முடிந்ததும் வாசல் வரை வந்து அவர்களை சவர்க்கார் வழியனுப்பினார். அப்போது வெற்றியோடு திரும்புங்கள்" என்று வாழ்த்தினார்" என்று போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் பாட்ஜே கூறினான். அந்த அடிப்படையில் வீரசவர்க்காரும் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி வாங்க உதவி புரிந்ததாக குவாலியரை சேர்ந்த சதாசிவ பார்ச்சூர் என்ற டாக்டரும் கைதானார்
மகாத்மா காந்தி கொலையையொட்டி கோட்சே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரிக்க நான்கு மாத காலம் பிடித்தது. இந்த வழக்கை விசாரிக்க டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக ஆத்மசரண் நியமிக்கப்பட்டார். இந்த நீதிமன்றத்தில் 1948 மே 27_ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்:
(1) நாதுராம் விநாயக் கோட்சே. வயது 37. ஆசிரியர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.
(2) நாராயண் தாதாத்ரேய ஆப்தே. வயது 34. நிர்வாக இயக்குனர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.
(3) விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே. வயது 38. "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" உரிமையாளர். ஆமத்நகர்.
(4) திகம்பர ராமச்சந்திர பாட்ஜே. வயது 37. ஆயுத விற்பனையாளர், புனா. இவர் அரசாங்க தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
(5) கோபால் கோட்சே. வயது 27. நாதுராம் கோட்சேயின் தம்பி. ஸ்டோர் கீப்பர், ராணுவ கிடங்கு, புனா.
(6) மதன்லால் பாவா. வயது 20. அகதி. புனா.
(7) சங்கர் கிஸ்தியா. வயது 20. பாட்ஜேயின் வீட்டு வேலைக்காரன்.
(8) சதாசிவ பார்ச்சூர். வயது 47. டாக்டர். குவாலியர்.
(9) விநாயக் தாமோதர் சவர்க்கார். வயது 65. பாரிஸ்டர் மற்றும் நிலக்கிழார், பம்பாய். (மேற்கண்ட 9 பேர்களுடன் கங்காதர் தாந்த்வாதி, கங்காதர் ஜாதவ், சூர்யோதவ் சர்மா என்ற மூவரும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் இறுதிவரை போலீசாரிடம் சிக்கவில்லை) இந்த வழக்கில், போலீஸ் தரப்பு சாட்சிகளாக 149 பேர் இடம் பெற்றிருந்தனர்.
காந்தியை சுட்டுக் கொல்ல கோட்சே பயன்படுத்திய "கறுப்பு பெரட்டா" துப்பாக்கி, கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கொலையாளிகளின் உடைகள், சாமியார் பாட்ஜே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடந்தது. பத்திரிகை நிருபர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் விசாரணையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரும்பிய வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவும், வாதத்தை எடுத்து வைக்கவும், ஆவணங்களை பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டனர். 1948 ஜுன் 22_ந்தேதி விசாரணை தொடங்கியது.
காந்தி கொலையை தடுக்க முடியாமல் போனாலும், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், சாட்சிகளை தயார் செய்வதிலும் போலீசார் திறமையாக செயல்பட்டார்கள். போலீஸ் தரப்பு சாட்சிகள் சிலரின் சாட்சியங்கள் வருமாறு:-
மிஸ் மனோரமா சால்வே:_ எனக்கு ஆப்தேயைத் தெரியும். ஜனவரி 28_ந்தேதி பம்பாயில் உள்ள "ஸீ கிரீன்" ஓட்டலில் அவரை சந்தித்தேன். ஜனவரி 31_ந்தேதி டெல்லி வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் டெல்லி "இந்து மகா சபை"க்கு அவர் பெயரில் தந்தி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி தந்தி கொடுத்தேன்.
ராம்சிங் (இந்து மகாசபை அலுவலக கூர்க்கா):_ ஜனவரி 20_ந்தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேரை இந்து மகாசபை அலுவலகத்தில் பார்த்தேன். அவர்கள் பகல் 12 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இரவு 8 மணிக்கு பதற்றத்துடன் திரும்பி வந்தார்கள். தங்கள் சாமான்களுடன் அவசரமாகத் திரும்பினார்கள்.
பேச்சிகா (மெரினா ஓட்டல் மானேஜர்):_ கோட்சேயும், ஆப்தேயும் எங்கள் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அப்போது, கார்கரே, மதன்லால், பாட்ஜே ஆகியோர் வந்து அவர்களை சந்தித்தார்கள் (கோட்சேயையும், மற்றவர்களையும் அடையாளம் காட்டினார்).
காளிராம் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சே தன் துணிகளை என்னிடம் கொடுத்து சலவை செய்து கொடுக்குமாறு சொன்னார். அந்தத் துணிகளை சலவைத் தொழிலாளியிடம் கொடுத்தேன்.
கன்யாலால் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சேயின் துணிகளில் "என் வி ஜி" என்று ஆங்கிலத்தில் சலவைக்குறி போடப்பட்டிருந்தது. அந்தத் துணிகளை நான் சலவை செய்து கொடுத்தேன்.
சோத்ராம் (பிர்லா மாளிகை தொழிலாளி):_ ஜனவரி 20_ந்தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக கார்கரே, மதன்லால் ஆகியோர் பிர்லா மாளிகையை ஒட்டியுள்ள என் குடியிருப்பு வழியாக பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு பின்புறம் சென்றார்கள். அங்கு செல்ல அனுமதிப்பதற்காக எனக்கு 20 ரூபாய் கொடுத்தனர்.
பேராசிரியர் ஜெயின்:_ காந்தியை கொலை செய்யப்போவதாக மதன்லால் என்னிடம் சொன்னான். இவ்வாறு கொலை சதி பற்றி பல சாட்சிகள் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். சாட்சிகள் இந்தி, மராத்தி, தெலுங்கு முதலிய மொழிகளில் சாட்சியம் அளித்தனர். அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டியிருப்பதால், சாட்சியத்தை பதிவு செய்ய நீண்ட நேரம் பிடித்தது.
"கொலை செய்வதற்கு நான் சதி செய்யவில்லை" என்று ஆப்தே மறுத்தான். வீரசவர்க்காரும், கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்தார். அவர் கூறியதாவது:-
"நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவன். பின்னர் இந்துமகாசபையைத் தொடங்கினேன். இந்து மகாசபை அலுவலகத்திற்கு பலரும் வந்து போவார்கள். அதுபோல் கோட்சேயும், ஆப்தேயும் வந்திருக்கிறார்கள். என்னை கோட்சேயும், ஆப்தேயும் சந்தித்து காந்தியைக் கொலை செய்யப்போவது பற்றி பேசியதாகவும், நான் வாசல் வரை வந்து "வெற்றியுடன் திரும்புங்கள்" என்று வாழ்த்தி வழியனுப்பியதாகவும் போலீஸ் தரப்பு சாட்சி பாட்ஜே கூறுவது பொய்.
நாங்கள் பேசியபோது பாட்ஜே அந்த இடத்தில் இல்லை. அப்படியிருக்க என்ன பேசினோம் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? அவன் கூறுவது அனைத்தும் கற்பனை." இவ்வாறு சவர்க்கார் கூறினார்.
தனக்கு மரண தண்டனை கிடைக்கப்போவது உறுதி என்று கோட்சேக்குத் தெரிந்திருந்தது.அதன் பிறகு நடந்தவை அனைவர்க்கும் தெரிந்ததே மகாத்மாவை கொன்றவனுக்கு இதை விட பெரிய தண்டனை வேற என்ன கொடுக்க முடியும்?
(மகாத்மா கொள்ள பட்ட இடம்)
அன்புடன் மஜீத்.
No comments:
Post a Comment